பிறந்து ஒருவாரமே ஆன நிலையில் அனாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு அரசு மருத்துவர்கள் மனித நேயத்துடன் சிறப்பு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி மில் அருகே பிறந்து ஒருவாரமே ஆன ஆண்குழந்தை கடந்த 7-ஆம் தேதி ஆதரவற்ற நிலையில்மீட்டெடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முதுகில் ஒரு கட்டியும், மலம் கழிக்கும் துவாரம் மூடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா மேற்பார்வையில், அறுவை சிகிச்சை துறை தலைவர் ரங்கராஜன் தலைமையில் 7- ஆம் தேதி அன்று குழந்தை அவசர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மலம் கழிக்கும் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதுகில் உள்ள கட்டியை குழந்தை வளர்ந்தபிறகே அகற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சமூக நலத்துறை குழந்தைகள் காப்பகத்தில் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேய செயலை பலரும் பாராட்டினார்.