திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில் 30ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கின்றனர்
மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே அண்ணா தி.மு.க. அம்மா பேரவை சார்பில் அம்மாவின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் பொதுமக்கள் அனைவரும் வழிபடும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஏறத்தாழ 12 ஏக்கர் சுற்றளவின் நடுவில் காண்போர் வியக்கும் வண்ணம் பல்வேறு கலை அம்சத்துடன் கட்டப்பட்டு வரும் ஆலயத்தின் மூலவராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சிலைகள் கடந்த தை பொங்கல் அன்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த சிலைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் பாலபிஷேகம் செய்தனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் முழு நீள வெண்கல சிலை ஏறத்தாழ 7 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை உள்ளது ஆலயத்தின் விமானத்தில் சிறப்பு கலசங்கள் வைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் அனைவரும் வந்து செல்லும் வண்ணம் பல்வேறு அடிப்படை வசதிகள் கோவிலில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் வண்ணம் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தியான மண்டபங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திருக்கோவிலை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வருகின்ற 30ஆம் தேதி திறந்து வைக்கின்றனர். இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு அதில் 11 ஹோம குண்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் 51 சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாட்டினை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்து வருவதுடன் இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்
மேலும் இந்த திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரடியாக சென்று அனைவரும் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு கொடுத்து வருகிறார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது :
உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சமுதாய மக்கள் மனதில் தெய்வங்களாக பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழர் குலசாமி புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
ஆனால் அந்தத் தலைவர்களை தெய்வமாக தொண்டர்கள் வணங்குவதில்லை. ஆனால் இந்த இயக்கத்தில் தான் தலைவர்களை தெய்வமாக தொண்டர்கள் வணங்கி வருகின்றனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மதுரை மக்களை மிகவும் நேசித்தனர்.
எப்போதும் மதுரை மக்கள் இவர்கள் மீது மிகவும் பற்றும் பாசமும் கொண்டுள்ளனர். புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா இதே மதுரையில் தான் முதலமைச்சர் நடத்தினார். அதேபோல் அம்மாவின் திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் மூலவராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை வைக்கப்பட்டுள்ளனர். இந்த திருக்கோயிலில் வருகின்ற 30ஆம் தேதி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்கள் கரங்களால் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்
அம்மா திருக்கோவில் கும்பாபிஷேகம் அன்று ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் பங்கேற்று தரிசிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து கோ பூஜை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வரும், துணை முதல்வரும் வழங்க உள்ளனர்.
இந்த கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயிலுக்கு வரும்போது மனம் அமைதி பெறும் வண்ணம் உருவாக்கப்பட்டு வருகிறது.