பெரியகுளத்தில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  அணிவகுப்பு பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையில்  துணை ராணுவப் படை மற்றும்  காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் வஜ்ரா கவச வாகனத்துடன் ஏராளமான காவல்துறையினர்,துணை ராணுவப் படையினர்  பங்கேற்றனர். தமிழகத்தில் அடுத்த ஏப்ரல்  மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ள  சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி  அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  

இந்நிலையில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும்,  பதற்றத்தை தணிக்கவும்  தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பை பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  துவக்கி வைத்து அணிவகுப்பு நடைபெற்றது.

பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமர்  தலைமையில் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பெரியகுளம் அரசு பேருந்து பணிமனை முன்பாக தொடங்கிய அணிவகுப்பு பேரணி நகரின் முக்கிய வீதிகளான விஆர்பி தெரு, அரண்மனை தெரு,  சௌராஷ்டிரா சத்திரம், உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

தேர்தல் அசம்பாவிதம் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,  பொதுமக்களிடம் பதட்டத்தை குறைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இந்த காவல்துறையினரின் அணிவகுப்பை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

 

 

Translate »
error: Content is protected !!