பொள்ளாச்சி,
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு தொற்று இதுவரையில் உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பொள்ளாச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் பகுதியில் 46 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 32 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 73 பேருக்கும் என பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 151 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகின்றனர். தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் பகுதி நேர ஊரடங்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள சுய விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.