போலி கால் சென்டர் நடத்தி, லோன் பெற்று தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தொலைபேசி இயந்திரங்கள்– 7, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் ரூ.40 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வேளச்சேரி, அன்னை இந்திரா நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் கணேஷ் சங்கர் (வயது 27). அவரது செல்போன் எண்ணில் பேசிய நபர் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு பணம் தேவைப்பட்டால் ஆவணங்கள் சமர்ப்பித்து லோன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். முதலில் லோன் தொகையில் 10 சதவீதத்திற்கு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை நம்பிய கணேஷ் சங்கர், தனக்கு ரூ.4 லட்சம் லோன் தேவை என கூறியுள்ளார். அதன்பேரில், கணேஷ் சங்கர் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பேசிய நபருக்கு அவரது அடையாள ஆவணங்களை செல்போனில் அனுப்பியுள்ளார். மேலும் ரூ. 40 ஆயிரத்துக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும், கணேஷ் சங்கருக்கு லோன் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக கணேஷ் சங்கர் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் வேளச்சேரி போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கணேஷ் சங்கருக்கு லோன் தருவதாக கூறிய நிறுவனத்தின் செல்போன் எண் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பிரேம்குமார் என்பவர் மேடவாக்கம், சந்தோஷபுரம், வேளச்சேரி மெயின் ரோடு என்ற முகவரியில் பெரேக்கா சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் போலி கால் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த அலுவலகத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் உடனுக்குடன் லோன் தருவதாகக் கூறி, லோன் தேவைப்படும் நபர்களை இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைத்துள்ளனர். மேலும் லோன் பெற்றுத்தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கால் சென்டர் நடத்தி வரும் முக்கிய குற்றவாளியான மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (32) தலைமறைவானது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் பிரேம்குமாரின் மனைவி, பென்னிஷா (23) மற்றும் கால் சென்டர் நடத்தி வந்த டீம் லீடர் கல்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கால் சென்டரில் பயன்படுத்தி வந்த தரைவழி தொலைபேசி இயந்திரங்கள் -7, செல்போன்கள் -3, கார் -1 மற்றும் ரொக்கம் ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகவுள்ள முக்கிய குற்றவாளிகளான பிரேம்குமார் மற்றும் அல்போன்ஸ் தேடி வருகின்றனர்.