மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தேர்வு மதிப்பெண்கள் கொடுத்த விவகாரத்தில், பல் டாக்டர் தனது குடும்பத்துடன் பெங்களூரு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
சென்னை,
தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பித்தது. போலி தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் தயாரித்து மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் மீது பெரிய மேடு காவல்நிலையத்தில் மருத்துவ கல்வி துணை இயக்குநர் செல்வராஜன் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலசந்திரன் மீது வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராக வேண்டும் என்று 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் மாணவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் பரமக்குடிக்கு சென்றனர்.
ஆனால் மாணவியின் குடும்பத்தார் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.மாணவியின் தாத்தா மற்றும் பாட்டி வீடும் பூட்டப்பட்டு உள்ளது. போலி நீட் மதிப்பெண் சான்று குறித்து மாணவியின் தந்தை பாலசந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரம் தங்களை கைது செய்ய கூடாது என்றும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை முன்ஜாமீன் பெறுவதற்குள் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் பல் டாக்டர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.