சென்னை,
388 போலீஸ் பாய்ஸ் கிளப் சிறார்களின் நீண்ட நாள் கனவை சென்னை நகர காவல்துறையினர் நனவாக்கியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகர காவல்துறை, குடிசைப்பகுதியில் வசிக்கும் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த ஏழை சிறார்களுக்கு தற்போது சென்னையில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண வைத்து அவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளனர்.
இதன் மூலம் அவர்களுக்கு காவல்துறை மீதான கண்ணியத்தையும், மரியாதையையும், தொடர்பையும் வலுப்பெற வைத்துள்ளது. போலீஸ் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் இந்த பாய்ஸ்கிளப் திட்டமும் ஒன்று.
அதன்மூலம் ஏழை எளிய குடும்பத்து மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை வளமாக்குவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் சென்னை நகர காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜ் தலைமையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் பாய்ஸ்கிளப் சிறார்களுக்கு அவர்களது நீண்ட நாள் கனனை நனவாக்கி பெருமை சேர்த்துள்ளனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற 10 வயது சிறுவன் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் தனது வீட்டில் டிவி இல்லாததால் அவர் பக்கத்து வீட்டில் ஜன்னல் வழியாகவும், வெளியில் நின்றும் கிரிக்கெட்டை ரசிப்பார்.
அவரைப்போல ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான பேர் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். இது போன்று 388 சிறார்கள் அங்கு வசிக்கின்றனர். அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலைய பாய்ஸ்கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
சிலம்பரசன் உள்பட அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண ஆவலாக இருந்தனர். அது தொடர்பாக திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜுக்கு தெரியவந்ததும் அதற்குறிய முயற்சிகளில் இறங்கினார்.
388 சிறார்களும் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு அகம் மகிழ்ந்தனர். அது தொடர்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாய்ஸ்கிளப்பைச் சேர்ந்த சிலம்பரசன் கூறுகையில்,
‘‘சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போதெல்லாம் நண்பர்களும், நானும் அங்கு ஓரமாக நின்றபடி எப்போதெல்லாம் பந்து பவுண்டரிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரசிர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி மகிழ்வோம்.
இப்போது கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’. திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜ் கூறியதாவது, ‘‘சிறார்கள் நேரடியாக கிரிக்கெட் போட்டியை கண்டு மகிழ்ந்ததை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய அணி வீரர்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் முகத்தில் அப்படி மகிழ்ச்சி, பூரிப்பு.
மேலும் இந்திய கிரிக்கெட் கேப்டன் வைரட் கோலி மற்றும் சென்னை கேப்டன் அஸ்வின் ஆகியோரை சிறார்கள் கண்ட போது அவர்கள் குஷியில் ஓ… என சப்தமிட்டு மகிழ்ந்தனர். மேலும் போலீஸ் – பாய்ஸ் கிளப்பில் பயிற்சியில் உள்ள சிறார்களும் சேர்ந்து இவர்களோடு அளவளாவுவதும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
சிறார்களின் கனவை நனவாக்குவது எங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். இந்த நிகழ்வுக்கு பின்புலமாக இருந்தது போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால். தமிழ்நாடு கிரிக்கெட் கழகத்தின் உதவியோடு இதனை செய்ய முடிந்ததை பெருமையாக நினைக்கிறோம்’.