மகளிரின் வாழ்வில் ஒளியேற்றும் மங்கையர் திலகம்

நாம் நம்மை மட்டும் பார்த்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கு என்ன என்று சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் ஆதரவற்றவர்கள், படிக்க முடியாத ஏழைகள், வாழ்வின் விளிம்பில் நிற்பவர்கள்,நலிந்து போனவர்கள், குற்றங்களுக்கு ஆளாகி சிறை சென்று வந்தவர்கள், இப்படி சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக, குறிப்பாக வசதியற்ற திக்கற்ற பெண்களின் திசைகாட்டியாக மாலுமியாக சமூகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வலம் வருகிறார் கலைமாமணி ஷோபனா ரமேஷ்.

யார் இந்த அற்புத மனிதநேயர் அவரின் செயல்பாடுகள் என்ன? அவரை நேரடியாக சந்தித்து விபரம் அறிவோம் என புறப்பட்டு சென்றோம் அவரது அலுவலகம் அமைந்துள்ள ஸ்பெக்ட்ராஸ் பேக் ஆப் சர்வீஸ் என்ற இடத்துக்கு…

மகளிரின் மாண்பை காக்கும் அவரது அலுவலகத்தில் எமது குழுவுக்கு இன்முக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பல்வேறு பணிகளை முடித்து விட்டு அலுவலகம் வந்த ஷோபனா அம்மையார் எமது குழுவுக்கு தமது பணிவான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்து விட்டு தம்முடைய வாழ்க்கை பயணத்தின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்..

திருச்சியை பூர்வீகமாக கொண்ட ஷோபனா ரமேஷின் தந்தை வேதநாராயணன் மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.தாயார் ஜெயலட்சுமி..தந்தையின் பணி நிமித்தமாக பல மாவட்டங்களில் கால்பதித்த ஷோபனா இளம் வயதில் பரதநாட்டியத்தில் ஆர்வம் உடையவராக இருந்ததால் தமது தாயார் ஜெயலட்சுமியின் துணையுடன் பரத நாட்டியத்தில் முத்திரை பதித்துள்ளார்..

தேசிய கவிபாரதியின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஷோபனா ரமேஷ் பாரதியாரின் பாடல்களை மட்டுமே தேர்வு செய்து உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக பெருமையுடன் நம்மிடம் பதிவு செய்தார்.நடிகர் கமலஹாசனுக்கும் பாரதியின் படைப்புகள் அதிகம் பிடிக்கும் என்பதை கோடிட்டு காண்பித்த ஷோபனா,தம்முடைய பரதநாட்டியத்தை பாரதியை போற்றி அரங்கேற்றி வருவதாகவும் கூறினார்.

.பரத நாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளையிடம் 5 வயதுமுதலே பரத நாட்டியத்தை பயின்று வந்த ஷோபனாவின் பரநாட்டிய அரங்கேற்றம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முன்னிலையில் 15 வது வயதில் நடைபெற்றதாக கூறும் அவர், தம்முடைய குழுவினருடன் 20 நாடுகளுக்கு சென்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் தமது பரதநாட்டியத்தை அரங்கேற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடம் நாட்டிய செல்வம் என்ற விருதையும் ,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதுகளை ஒரே நாளில் பெற்றது வாழ்வின் மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் அது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்…

பரத நாட்டியத்துடன் நின்றுவிடவில்லை இவரது சேவை, சென்னையில் தூதஞ்சல் எனப்படும் கூரியர் சர்விசை முதன்முதலாக தொடங்கி அதில் வரும் வருமானத்தில் தம்முடைய வாழ்க்கை செலவினங்களையும் செய்து எஞ்சிய வருமானத்தில் ஏழைகளின் வாழ்க்கைக்கு செலவிட தொடங்கி தம்முடைய சமூக பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார் ஷோபானா.

கூரியர் சர்வீசுக்கு ஸ்பெக்ட்ரா என்ற பெயரில் தொடங்கிய ஷோபனாவின் நிறுவனத்தில் பணி புரியும் அலுவலரகள் ஊழியர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வாழ்க்கை பயணத்தை தொடங்க திக்கற்று நின்றவர்கள் ஆவர். வாழ்க்கைக்கு திசை தெரியாமல் நின்றவர்களை வழிகாட்டி மாலுமி போல் அழைத்து சென்று அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார் ஷோபனா ரமேஷ்..

வாழ்க்கையில் விரக்தி அடைந்தோரை தேடிப்பிடித்து அவர்களுக்கு உதவி செய்து வாழ்வில் வழி காட்டுவதில் ஒரு நிம்மதி இருப்பதாக கூறும் ஷோபனா திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளார்.

தமிழகம் முழுதும் ஆதரவற்றோரை ஆதரிக்கும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் 250 சுய உதவி குழுக்களை அமைத்து 2500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு கைவினை பொருள் தயாரிப்பு,கேக்,ஜாம்,ஜெல்லி, மற்றும் பழச்சாறுயாரித்தல்,சணல் பை உற்பத்தி , தையல் உள்ளிட்ட சுய தொழில்களை கற்று கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்…

மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என ஆதரவில்லா மகளிரை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் அவர்களின் குழந்தைகளின் எதிர் கால கல்விக்கும் துணை நிற்கிறார் இந்த மங்கையர் திலகம் ஷோபனா….

தமது நிறுவனத்தில் பணி புரிபவர்களில் பலர் சிறையில் இருந்து விடுதலை ஆனவர்கள் என்றும் இடுகாட்டில் வேலை செய்தவருக்கும் தமது நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு அவர்களும் கவுரவமான வாழ்க்கை பயணத்தை நடத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்..

சமூகத்தில் எவருமே தவறு செய்யாதவர்கள் இல்லை.தவறு செய்பவர்களை தத்தெடுத்து அவர்களை திருத்தி நல்வழியின் பக்கம் கொண்டு வருவதில் உள்ள செயல்பாடுகள் தமக்கு மிகவும் மனதிருப்தியை தருவதாக கூறுகிறார் ஷோபனா ரமேஷ். தம்முடைய வாழ்க்கை பயணத்தில் பல்வேறு விளிம்பு நிலை மக்களை சந்தித்து அவர்களை கைத்தூக்கி விடுவதில் உள்ள ஈடுபாடு தமக்கு மன நிறைவை தருவதாகவும் கூறுகிறார்.இவர் பாரதியாரின் பாடல்களை கொண்டு பரநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதோடு அவரின் கொள்கையின் மீது தீராத பற்று வைத்து அதனை நிறைவேற்றும் விதமாக சமூக பணியாற்றி வருகிறார்..

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தம்முடைய மகளிர் சுய உதவி குழு அமைத்து அதன்மூலம் பல நூறு பெண்களின் வாழ்க்கைக்கு அச்சாரமாக திகழ்கிறார்.. சமூகத்தில் எதனையும் எதிர் பார்க்காமல் மனிதநேயத்துடன் உதவி ஒன்றே எனது உள்ளம் என்பதை மெய்பிக்கும் விதமாக செயல்பட்டு வரும் புதுமைப்பெண் ஷோபனா எதிர் காலங்களிலும் தமது சேவை ஆழமான முறையில் செயல்படுத்தப்படும். செம்மையாக தம்மை சார்ந்து நிற்பவர்களுக்கு வழி காட்டப்படும் என உறுதி கூறுகிறார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது,வலுவற்ற ஏழைகளையும் வாழவைக்க வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் ஷோபனா ரமேசுக்கு மத்திய மாநில அரசுகள் விருதுகள் மட்டும் வழங்குவதுடன் நில்லாமல் அவரது சேவைக்கு அங்கீகாரம் தரும் விதமாக அவரது பணிகளுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என்பதே மனிதம் போற்றும் உலகத்தின் மாபெரும் எதிர்பார்ப்பு…. என கலைமாமணி ஷோபனா ரமேசிடம் விடைபெற்றோம் நாம்.

Translate »
error: Content is protected !!