மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளிடம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமாக நெல் மூட்டைகள் தேங்கிய நிலையில், விவசாயிகளுக்கு திறந்தவெளி நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டித்து ஏறுபக்கம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம்–மதுராந்தகம் சாலையில் கீழவளம் என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி செந்தில்குமார், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.