கொடைக்கானல் அருகே, மனநலம் பாதித்தவரை தாக்கியதாக, கொடைக்கானல் விவசாய அணி தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாட்டுப்பட்டி கிராம சுற்றுப்பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ரெங்கராஜ் என்ற 45 வயது மன நலம் பாதித்தவர், தனது மனைவி மற்றும் உறவினர்களை பிரிந்து, மாட்டுப்பட்டி கிராமத்தில் திரிந்து வருகிறார்.
அப்பகுதி மக்கள் டீ,காபி,உணவு உள்ளிட்டவைகள் வாங்கி தருவது வழக்கம். அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் உறங்கி, ரெங்கராஜ் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவரும், கொடைக்கானல் பகுதி விவசாய அணி தலைவராகவும் உள்ள பால்செல்வம் என்பவர், மனநலம் பாதித்த ரெங்கராஜ் தன்னை ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக்கூறி, நேற்று தாக்கியுள்ளார்.
ஆத்திரமடைந்து பால்செல்வம் உருட்டுக்கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கியதில், ரெங்கராஜ் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, மனநோயாளியை பால் செல்வம் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. மனநல நோயாளி என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கியவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மனநல நோயாளி ரெங்கராஜை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.