முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை அபேஸ் செய்யும் வழிப்பறி கொள்ளையென் கைது

சென்னை,

ரோட்டில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை பறிப்பதையே தொழிலாகக் கொண்ட பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ்சாலை, துவாரகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாத். பாஜவில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென்சென்னை மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இவரது தாயார் ராவணம்மா.

கடந்த மாதம் 23ம் தேதி மயிலாப்பூர், திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அருகில் உள்ள தனது உறவினரின் குழந்தைக்கு பிறந்தநாள் எனவும் குழந்தையை தாங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று கூறி ராவணம்மாவின் கைகளில் இருந்த மூன்று மோதிரங்களை பறித்துச் சென்றுள்ளார்.

 இந்தச் சம்பவம் தொடர்பாக ராவணம்மா மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் இதற்கு அடுத்தடுத்த நாட்களில் ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை பகுதிகளில் இதே போன்று மர்ம நபர் ஒருவர் முதியவர்களை குறிவைத்து அவர்கள் கழுத்திலிருந்த சங்கிலி மற்றும் விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களை பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.

அதனைத் தொடர்ந்து குற்றவாளியைப் பிடிக்க மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் தனியாக செல்லும் முதியவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்துச் செல்வது பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45) என்பது தெரியவந்தது. டிபி சத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் தங்கநகைகளை

பறிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் அருகில் ஒரு நகை கடை திறந்து இருப்பதாகவும் அங்கு வயதான முதியவர்களுக்கு இலவசமாக நகைகள் கொடுப்பதாகவும் கூறி அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்.

நகைகள் அணிந்து சென்றால் நகைக்கடையில் இலவசமாக நகைகள் தர மாட்டார்கள் எனவும் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழட்டி என்னிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்பார். நகைக் கடையில் தங்க நகையை வாங்கியவுடன் தான் மீண்டும் அதனை ஒப்படைத்து விடுவதாகவும் கூறி நகைகளுடன் மாயமாகி விடுவார்.

இரண்டாவது வழியாக அருகில் தனது உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் என்றும் தாங்கள் வந்து குழந்தையை ஆசீர்வதித்தால் குழந்தையின் பெற்றோர் ஒரு சவரன் தங்க நகை கொடுப்பார்கள் எனவும் கூறி முதியவர்களின் நகைகளை பறித்து செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவர் மீது எஸ்பிளனேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ஜாம்பஜார், அண்ணாசாலை, எஸ்.ஆர்.எம்.சி, கோடம்பாக்கம், சேலையூர், குமரன் நகர், திருவேற்காடு, ஐஸ்ஹவுஸ் உட்பட சென்னையின் பல காவல் நிலையங்களில் இதே போல முதியவர்களை ஏமாற்றி நகைகளை பறித்துச் சென்ற வழக்குகள் 25-க்கும் மேல் உள்ளது தெரிய வந்தது.

கடந்த 2019ம் ஆண்டு அமைந்தகரையில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி நகை பறிக்கும் போது சுதாரித்து தப்பிக்க முயன்ற மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்த வழக்கில் திருமலை சிறைக்குச் சென்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தனியாக நடந்து செல்லும் முதியவர்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் 23ம் தேதி மயிலாப்பூர் பகுதியிலும் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ராயப்பேட்டை மற்றும் ஐஸ்அவுஸ் பகுதிகளிலும் தனியாக செல்லும் முதியவர்களை குறிவைத்து நகைகளைப் பறித்துச் சென்றது தெரியவந்ததுஇவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 கிராம் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து நகைகளை வாங்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!