முதுபெரும் அரசியல் தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகாய், உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 82.
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய், ஆகஸ்ட் 25ம் தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
பின்னர், தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த அவர், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன; உடல் நிலை மோசமடைந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பினார். அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் தருண் கோகாயின் உயிர் பிரிந்தது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மூன்று முறை அசாம் மாநிலத்தின் முதல்வராக தருண் கோகாய் பதவி வகித்துள்ளார். கடந்த 1991-1996ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசின்கீழ், மாநில உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தருண் கோகாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மூத்த தலைவராகவும், மூத்த நிர்வாகியாகவும் இருந்தவர். அவரது மறைவால் ஆழ்ந்த சோகத்தில் உள்ள குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.