தென் தமிழக மக்களின் ஜீவாதரணமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த முல்லை பெரியாறு அணை.
இந்த முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர், தேனிவட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனிமாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல்போகத்திற்கு ஜூன்மாதம் திறக்கவேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது. கடந்த ஆண்டும் ஜூன் மாதம் அணைநீர்மட்டம் குறைவாக இருந்தததால் ஆகஸட் 13 –ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடிவரை உயர்ந்ததால், முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல்நாள் தண்ணீர் திறக்க விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள ஷட்டர் பகுதியில் நடைபெற்றது. முன்னதாக விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயம் செழிக்க பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சுரங்க வாய்யகால் பகுதியிலுள்ள ஷட்டரை இயக்கி, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு சாகுபடிக்காக 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடியாக தண்ணீரை திறந்து விட்டார்.
விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர். மேலும் விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் விவசாயிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 503 கனஅடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் மில்லியன் 4908 கன அடியாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறந்து இருக்கு முதல்வருக்கு நன்றி கூறினார். மேலும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களான உரங்கள் மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.