முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

நாமக்கல்,

முள்ளுக்குறிச்சியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் முள்ளுக்குறிச்சியில் நாளை 7ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இதனையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைத்திருப்பது, ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாகப் பாதை அமைத்திருப்பது, ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைத்திருப்பது,

காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது போன்றவற்றை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியினைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் பார்வையாளர்கள் கூடம் அமைத்திருப்பது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்குத் தனியாகப் பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பது,

மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கத் தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது, ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்குப் பாதுகாப்பாக தேங்காய்நார் பரப்பப்பட வேண்டும் என்றும் தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும் பார்வையாளர்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்யவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், வட்டாட்சியர் பாஸ்கரன், ராசிபுரம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் .கே.பொன்னுசாமி, கார்கூடல்பட்டி தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் கே.பி.எஸ்.சரவணன், அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!