சென்னை,
ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). ஆட்டோ டிரைவர். கடந்த 12ம் தேதியன்று அன்று காலை 10.30 மணியளவில் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலை, ராணி மேரி கல்லூரி எதிரில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே அதனை சுப்பிரமணி அருகில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் நேர்மையாக மெரினா காவல் நிலையம் சென்று குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். ஆய்வாளர் பணத்தை சரிபார்த்த போது அதில் ரூ.1,75,000- பணம் இருந்தது தெரியவந்தது.
காவல் குழுவினர் பணத்தின் உரிமையாளர் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1,75,000- அடங்கிய பணப்பையை எடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறந்த குடிமகனாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கவுரவித்தார்.