பொள்ளாச்சி,
கொரோனா பேரிடர் காலத்தில் கடைக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் நிர்ணயமாகக் கொண்டுள்ளார்கள் என பொள்ளாச்சியில் வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் நேற்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளரிடம் பேசிய போது, “கொரோனா பேரிடர் காலத்தில் கடைக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்திருப்பது வணிகர்களின் தொழில் ஆதாரத்தை அழிக்கக்கூடிய செயலாக மாறி இருக்கிறது.
அரசுத்துறை அதிகாரிகள் கொரோனா காலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வணிகர்களிடம் வழிப்பறி செய்வது போல இருக்கக்கூடாது.” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஏற்கெனவே ஓராண்டாக வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையில் மீண்டும் வாழ்வாதாரத்தை மேலே கொண்டு வர 40 விழுக்காடு வியாபாரம் செய்து வரும் நிலையில்,
அரசு தடாலடியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவதன் மூலம் வணிகர்களின் பாதிப்புகளை ஈடுகட்டக் கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனா தடுப்பூசி என்பது இந்திய, தமிழக மக்கள் அனைவருக்கும் போட்டு முடிக்கப்பட வேண்டும். ஆனால், தடுப்பூசி தனியார் வசம் ஆக்கப்பட்டு அதற்கு விலை நிர்ணயம் செய்யாமல் அதிகப்படியான விலையேற்றம் ஏற்படுவதற்கு வணிகர் சங்கம் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு என்பது இருக்கக்கூடாது இந்தத் தளர்வில் மக்களை மக்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளவேண்டும் என்று அரசு மக்களிடம் வலியுறுத்த வேண்டுமே தவிர, ஊரடங்கு என்று சொன்னால் பொருளாதாரம் முழுமையாக அடங்கிவிடும்.
இதில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்யவில்லை என்றால், ஆயிரக்கணக்கான வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதோடு, கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் மளிகைப் பொருட்களின் விலையை தன்னிசையாக ஏற்றக் கூடாது என்பதில் வணிகர் சங்கம் பேரமைப்பு தெளிவாக இருக்கிறது. விலையேற்றதிற்கு யார் காரணமாக இருத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.