சென்னை, கொரட்டூர் பகுதியில் லாக்டவுன் தடையை மீறி பட்டம் பறக்க விட்ட சிறுவன் உட்பட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். 6 காற்றாடிகள் மற்றும் 3 லோட்டாய் நூல் கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சென்னை நகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாஞ்சா நூல் தயாரிப்பவர்களும், அதைக் கொண்டு பட்டம் பறக்க விடுபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை போலீசார் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கொரட்டூர் போலீசார் நேற்று முன்தினம் பாடி, வடக்கு மாட வீதி பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது அங்கு சில இளைஞர்கள் ஒன்று கூடி பட்டத்தை பறக்க விட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து பட்டம் பறக்க விட்ட
அதே பகுதியைச் சேர்ந்த சிவா (25), பாலாஜி (24), சதீஷ் (27), பிரேம்குமார் (26) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பட்டங்கள் மற்றும் 3 லோட்டாய் நூல்கண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.