கடந்த 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வருவாய் என்ற உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பதை மத்திய நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியது. இந்த நடைமுறை கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதில், அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இச்சூழலில், 2019-20 நிதியாண்டுக்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
–