வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.150 கோடி சிக்கியது

தமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை, ரூ.150 கோடி கணக்கில் வராத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கோவையில் திமுக பிரமுகர் வீடு, திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம், ஈரோட்டில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு, சென்னை மற்றும் நாமக்கல்லில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு குழுமம் மற்றும் கட்டட ஒப்பந்ததாரரின் இடம் உள்ளிட்ட இடங்களில் இரண்டாம் நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.

ஈரோட்டில் நடந்த சோதனையில், மாணவர்களிடம் பெற்ற கட்டணங்களுக்கு முறையாக கணக்குக் காட்டப்படவில்லை என்பதும், கணக்கில் வராத பணம் அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு, பின்னர் நிறுவனம் ஒன்றின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், நிறுவனத்தின் இதர பங்குதாரர்களான திருப்பூரை சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் ஒருவரும், ஜவுளி வியாபாரி ஒருவரும் வருமான வரியின் சோதனையில் சிக்கினர்.

இந்த சோதனைகளில் இதுவரை ரூ.150 கோடி மதிப்புடைய கணக்கில் வராத முதலீடுகளும், செலவுகளும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ரூ 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!