வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டன. குறிப்பாக, 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரித் துறையின் கடைசி அறிவிப்பின்படி, இன்று (செப்டம்பர் 30)தான் வரித்தாக்கல்  செய்வதற்கான கடைசித் தேதியாகும். கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்றும் வரித் தாக்கல் செய்வதில் பலருக்கு சிரமம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு 2018-19ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதியாகும். இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டுக்கான வரித் தாக்கலுக்கும் அதே கால அவகாசத்தை வருமானவரித்துறை  வழங்கியுள்ளது. கொரோனாவின் தீவிரம் தொடரும் பட்சத்தில் நவம்பர் மாதத்தைத் தாண்டியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வரித் தாக்கலில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதமாக செலுத்தினால் கூடுதலாக ரூ.5,000 அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். டிசம்பரையும் தாண்டி மார்ச் 31ஆம் தேதி வரை வருமான வரியைத் தாக்கல் செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 
Translate »
error: Content is protected !!