வாக்கிங் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய காமுகன்கள்: வாட்ஸ்அப் வீடியோவில் குமுறல்; நடவடிக்கை எடுக்குமா சென்னை பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு

 

சென்னை:

சென்னையில் வாக்கிங் சென்ற இளம்பெண்ணை பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அது தொடர்பாக அந்தப் பெண் சமூகவலை தளங்கள் மூலம் அழுது குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, போரூர். முகலிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது செல்ல நாயுடன் அந்த பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இது தொடர்பாக அந்தப் பெண் சென்னை எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அந்த புகாரை எடுக்கவில்லை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் வாட்ஸ்ஆப்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘‘போரூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அமைதியான சாலை அது. அங்கு பைக்கில் வந்த ஆண் ஒருவர் என் நெஞ்சில் கைவைத்து பலவந்தப்படுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பித்து ஓடினேன். நான் கூச்சலிட்டதால் அவர் தப்பியோடி விட்டார். அந்த பதட்டத்தில் அவரது வாகனத்தின் நம்பர் பிளேட்டை மட்டும் என்னால் பார்க்க முடிந்தது. அது தொடர்பாக நான் ஆன்லைனில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நானே புலனாய்வில் இறங்கியுள்ளேன். அந்த இடத்தில் வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கேட்டு சேகரித்தேன்.

அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அவனை பிடித்தாலும் அவனை அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் மட்டுமில்லை. இதுபோன்று ஆயிரக்கணக்கான பெண்கள் வாக்கிங் செல்லும் போது இது போல அவதிப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்களால் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். இந்நாட்டில் பெண்ணை விட பசுமாட்டிற்கு பாதுகாப்பு அதிகமாக கொடுக்கிறார்கள்’’ என்று அந்தப் பெண் வீடியோவில் பதிவு வெளியிட்டுள்ளர்.

 

இந்த பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட  பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்தப் பெண் சேகரித்து வைத்துள்ள சிசிடிவி பதிவுகளை
வாங்கிச்சென்ற போலீசார் அந்த மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அந்தப் பெண்ணிடம்  தெரிவித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக சென்னை நகர பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Translate »
error: Content is protected !!