விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு (எல்.டி.டி.இ.) பயங்கரவாத இயக்கம் என்று கூறி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இங்கிலாந்தில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக 2018ம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அந்த நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியது. அத்துடன், இந்த தடையை நீக்க கோரி இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் தற்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இல்லை என, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இம்மனு மீது ஜூலை மாதம் 29, 30 ஆகிய தேதிகளில், மூடப்பட்ட நீதிமன்றத்திலும், அதேபோல திறந்த நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது.
விடுதலை புலிகள் அமைப்பை பொறுத்தவரையில், இங்கிலாந்தில் அது எந்தவிதமான நாச செயல், அல்லது எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த தடை நீக்கப்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றம், தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது. எனவே, இங்கிலாந்தில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–