சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமான், புவனேசுவரம் (ஒடிஸா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய நகரங்களுக்குச் செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுத்தால் தான் விமானத்தில் பயணிக்க முடியும். சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகள் பயணம் ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவாா்கள். அந்தப் பயணிகள் சான்றிதழுடன் வந்து மீண்டும் விமானப் பயணம் மேற்கொள்ளலாம். தனி விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று விமான நிலைய நிா்வாகம் அறிவித்துள்ளது.