விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலருக்குக் காய்ச்சல் மற்றும் சளி போன்ற கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அதையடுத்து, கட்டுமானத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 21,243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,697 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.