விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு மையம்; அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம்,

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் கலைஞர் நகரில் உள்ள திருமுக்கூடல் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், ஊறுகாய்கள் உள்ளிட்ட இயற்கை இணை உணவு தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தக் குழுவினருக்கு ஊக்க நிதியாக மாவட்ட கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து ரூ.3.97 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் குழுவைச் சேர்ந்த 7 பேர் நடத்தும் இந்த மையத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று, மையத்தையும், முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.61.95 லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 பேருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சாா்ஆட்சியர் எஸ்.அனு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!