வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லி வாலிபர்கள் 3 பேர் கைது

வேலை வாங்கித்தருவதாக கூறி போலி இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லியைச் சேர்ந்த பலே ஆசாமிகள் மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சிவசங்கர் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தேடி www.TIMES4JOB.COM என்ற இணையதளத்தில் பதிவிட்டேன். அந்த இணையதளம் மூலம் கால்சென்டரிலிருந்து ஒருவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரூ. 3 ஆயிரம் பணம் கட்டி பதிவு செய்ய வேண்டும் என்றும், பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அந்த நபர் உறுதி அளித்தார். அதன் பேரில் நான் ரூ 3 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தினேன். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வேலை எதுவும் வழங்கவில்லை. இதனால் மீண்டும் அந்த இணையதளம் தொடர்பான கால்சென்டர் நிர்வாகியை தொடர்பு கொண்டேன். அதற்கு அவர்கள் ரூ 8 ஆயிரம் பணம் செலுத்தினால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஒரு வாரத்திற்குள் வேலை கிடைக்கும் என்று மீண்டும் ஆசை வார்த்தை காட்டினர். அந்த வகையில் சிறிது சிறிதாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் 422 வரை- அந்த நிறுவனத்துக்கு செலுத்தினேன். ஆனால் வேலை வாங்கித்தராமல் மோசடியில் செய்து விட்டனர்’’ இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கூடுதல் டெபுடிகமிஷனர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் புலனாய்வு விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த www.TIMES4JOB.COM இணையதளம் டில்லியில் இருந்து இயங்கி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து டில்லியைச் சேர்ந்த ஆரிப்கான் (வயது 31), வாஜித்கான் (-29), சந்தீப்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இணையதளம் மூலம் இளைஞர்களை ஆசைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!