மதுரை – போடிநாயக்கனூர் மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு 350 கோடி செலவில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது.
92 கிமீ தொலைவு உள்ள இந்த அகல இரயில் பாதை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி தண்டவாளங்கள் அமைக்கும் பணி என வேகமாக நடைபெற்றது. முதற்கட்டமாக 37 கிமீ தொலைவு உள்ள மதுரை – உசிலம்பட்டி வரையிலான சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது.
பின்பு இரண்டாம் கட்டமாக 21 கிமீ தொலைவு உள்ள உசிலம்பட்டி – முதல் ஆண்டிபட்டி வரையிலான சோதனை ஓட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது, தேனி வரை பணிகள் முழுமையாக நிறைவுபெற்றதைத் தொடர்ந்து தற்போது மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இஞ்சின் சோதனை முறையில் இயக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மதுரையில் புறப்பட்ட ரயில் இஞ்சின் தற்போது தேனி ரயில் நிலையம் வந்துசேர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்பு ரயில் இஞ்சின் தேனி பகுதிக்கு வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மலர்கள் தூவி ஆரவாரத்துடன்
உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னூர் வைகை ஆற்றுப் பாலம், அரண்மனைபுதூர் விலக்கு பகுதி, நகர் பகுதி வழியாக 20 கிமீ வேகத்தில் கடந்து சென்ற இரயில் இஞ்சினை வழி நெடுக பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
ரயில் இஞ்சின் இயக்கத்தினால் இரயில்வே கிராசிங் உள்ள பகுதிகளான பாரஸ்ரோடு பகுதி, பெரியகுளம் சாலை , ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று இஞ்சின் இயக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.