கலப்பு திருமணத்தால் ஒதுக்கி வைப்பு 25 குடும்பத்தினர் கோயில் விழாவில் பங்கேற்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். நல்லூர் கிராம தலைவர்களாக ஒரு சமூகத்தின் பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் உள்ளனர். நான் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணான ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து, 2 குழந்தைகள் உள்ளனர். இதேபோல் எங்கள் கிராமத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் கலப்புத்திருமணம் செய்துள்ளோம். இதனால், ஊர் தலைவர்கள், மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்.

எங்கள் ஊரில் உள்ள நல்லூர் பகவதி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திலும் தலைக்கட்டு வரிவசூல் செய்யப்பட்டு, திருவிழா கொண்டாடப்படும். கலப்புத்திருமணம் செய்த 25 குடும்பங்களிடம் ‘தலைக்கட்டு வரி’ பெறவும் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி மறுத்துவிட்டனர். எங்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சிவஞானம் நேற்று விசாரிதது, ‘‘பொன்னமராவதி தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி கலப்புத்திருமணம் செய்த 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Translate »
error: Content is protected !!