3 ஆண்டுகளாக கட்டாமல் இருக்கும் கான்கிரீட் வீடுகளை விரைந்து முடித்து தர வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள மலை அடிவாரத்தில் இராசிமலை என்னும் இடத்தில்  35 குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் மலைப்பகுதியில் பாறை இடுக்குகள் மற்றும் வனப்பகுதிகளிலும் குடிசை அமைத்தும் வாழ்ந்து வந்தனர்.

 

இவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் வெளிநாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக 35 சிமிண்ட் சீட் மேற்கூரையுடன் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் மேற்கூரைகள் விரிசலும், உடைந்தும், அதோடு வீட்டின் அஸ்திவாரம் மழை நீரால் அரித்தும் சிதிலமடைந்த ஆபத்தான வீடுகளில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

எனவே கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு மலைவாழ் மக்கள் குடியிருந்த வீடுகளில் அனைத்தும் இடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முன்னாள் தமிழக துணை முதல்வர் .பன்னிர்செல்வம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 3கோடியே 49 லட்சம் ரூபாயில் 35 காங்கிரீட் வீடுகளை ஓர் ஆண்டிற்குள் கட்டி முடிக்க ஒப்பந்தம் போட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியின மலைவாழ் மக்கள் குடியிருக்க தற்காலிகமாக பிளாஸ்டிக் குடிசைகள் அமைக்கப்பட்டு குடியிருந்து வந்த நிலையில் தற்பொழுது  பிளாஸ்டிக் பாய் குடிசைகள் அனைத்தும் வெயில் மற்றும் காற்று மழையால் சேதம் அடைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பழங்குடியின மலைவாழ் மக்கள் குடியிருக்க தரமான வீடுகள் இல்லாத நிலையில் பெரும் அவதியுற்று வருவதாகவும் தாங்கள் குடியிருக்கும் தற்காலிக குடிசைகளை புதிய பிளாஸ்டிக் பாய்களை கொண்டு சீரமைத்தும், தங்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடித்து தங்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என பழங்குடியின மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!