ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியாக மதுபாலா நடித்து உள்ளார்.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது. சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்ட மேடை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு தலைவி படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டதாக கங்கனா ரணாவத் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்ற புகைப்படங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். மக்களை பார்த்து கையெடுத்து கும்பிடுவதுபோன்றும், குழந்தைகளுடன் உட்கார்ந்து சத்துணவு சாப்பிடுவது போன்றும் அந்த புகைப்படங்கள் இருந்தன.
அவற்றை பார்த்த ரசிகர்கள் அசல் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக அரவிந்தசாமியை பாராட்டி வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அரவிந்தசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது கவுரவம் மட்டுமன்றி பெரிய பொறுப்பும் ஆகும். என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.