அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ய, நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, நீதிபதி கலையரசன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
மேலும், கடந்த மாதம் 15ம் தேதி இது தொடர்பான மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், கடந்த 16ம் தேதி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. எனினும், உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்னும் ஒப்புதல் தரவில்லை. இதன் காரணமாக மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், மசோதா குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 45 நாட்களாக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தற்போது தமிழக அரசு அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.