பங்குச்சந்தை முதலீட்டு மோகத்தில் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரூ. 82 லட்சம் கையாடல்….உதவி மேலாளர் கைது

சென்னை,

பங்குச்சந்தை முதலீட்டு மோகத்தில் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரூ. 82 லட்சம் கையாடல் செய்த வங்கி உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளர் ஜிடகாம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘எங்களது வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்த மாதவன் என்பவர் ராமகிருண்ணன் என்பவரின் லோன் வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 82 லட்சம் கையாடல் செய்து விட்டார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில், துணைக்கமிஷனர் கண்ணம்மாள், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து கரூர், அருமைகாரன் புதூரில் பதுங்கியிருந்த மாதவனை போலீசார் கைது செய்தனர். இதில் மாதவன் கடந்த 2013 மற்றும் -2014ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை பழக்கமாக வைத்துள்ளார்.

பங்குச் சந்தை மோகத்தில் அடிமையாகி நிறைய கடன் பெற்றிருந்துள்ளார். அவற்றை அடைப்பதற்காக ராமகிருண்ணன் என்பவரின் கணக்கில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ. 82 லட்சத்தை இன்டர்நெட் மூலம் தனது மனைவியின் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இவ்வாறு கையாடல் செய்த பணத்தினை பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்திருப்பதும் தெரிய வந்தது. விசாாரணைக்குப்பின்னர் மாதவனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோர்ட் உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். மாதவன் இதேபோல் வேறு ஏதாவது கணக்கில் கையாடல் செய்துள்ளாரா, மோசடியில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!