விருதுநகர்,
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர்.
மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு பேராடிக்கொண்டிருந்தனர். தகவல் அறிந்து போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 17 பேர் பலியானர்கள் 36 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களில் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் 2 டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 19 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைக்காரை தேடி வந்தனர்.
இந்நிலையில் வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.