சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்தை தடயவியல்துறை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சென்னை, அயனாவரம், சோலை தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் மொத்தம் 12 குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வரும் நோபல் மங்கள் குமார் மற்றும் அவரது மனைவி மெர்லின், குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடும்பங்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதேபோல் கார் பார்க்கிங், குடியிருப்பு, பராமரிப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதியினர் சம்பவ தினத்தன்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரையும் சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர். மேலும் அப்பார்ட்மென்ட்டில் மேல் தளத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அந்த அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும் முத்துக்குமரன் என்பவர் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நோபள் மங்கள் குமார் துப்பாக்கியால் மேல்தளத்தை நோக்கி சுவற்றில் சுட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து அயனாவரம் போலீசார் மெர்லின், நோபல் மங்கள் குமார் ஆகியோர் மீது 294 பி -(ஆபாசமாக பேசுதல்), 506 (2)- (கொலை மிரட்டல்) மற்றும் ஆயுதத்தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தடயவியல்துறை உதவிக்கமிஷனர் சோபியாஜோசப் தலைமையில் நேற்று அந்த அப்பார்ட்மென்ட்டில் போலீசார் துப்பாக்கியால் சுட்ட இடத்தை பார்வையிட்டனர். விசாரணையில் நோபல் மங்கள் குமார் ‘ஏர்கன்’ துப்பாக்கியாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் போலீசார் தேடுவது தெரிந்ததும் நோபல் மங்கள் குமார், அவரது மனைவி மெர்லின் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி எந்த ரகத்தை சேர்ந்தது என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.