சென்னை, ராயப்பேட்டை மற்றும் மணலி புதுநகர் பகுதியில் மாவா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கணவன், மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 ½ கிலோ மாவா மற்றும் 350 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை கண்டறிந்து அதனை பதுக்குபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை நகர போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை நகரம் முழுவதும் போலீசார் தினந்தோறும் குட்கா கடத்தல் ஆசாமிகளை வாகன சோதனை மூலம் கண்காணித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராயப்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது ராயப்பேட்டை அம்பேத்கார் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்கள் குறித்து ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு அதிரடி ரெய்டு நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 ½ கிலோ எடை கொண்ட மாவா பொட்டலங்கள் சீவல் பாக்கு- ½ கிலோ மற்றும் ஒரு மிக்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல மணலி புதுநகர் போலீசார் நேற்று காலை ஆண்டாள் குப்பம் சந்திப்பு அருகே ரகசியமாக மாவா மற்றும் குட்கா பாக்கெட்டுகளை விற்ற நடராஜன் (36), அவரது மனைவி மம்தா (27), கோபிநாத் (42), தங்கவேல் (58) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ எடை கொண்ட மாவா பொட்டலங்கள், ஹான்ஸ்- 250 பாக்கெட்டுகள், கூலிப் மற்றும் எம்.டி.எம்.-100 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வகையில் நேற்று சென்னை நகரில் போலீசார் நடத்திய ரெய்டில் 9 1/2 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.