மன்னாரில் ரூ. 1. 61 கோடி மதிப்புள்ள கேரளா கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டிகள் மீட்பு

இலங்கை, மன்னார் மாவட்டத்தில் ரூ. 1.61 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர். அது தொடர்பாக பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இலங்கை, மன்னார் கடலோரப்பகுதிகளில் கஞ்சா மற்றும் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அது தொடர்பாக மன்னார் மாவட்டம் போலீஸ் தலைமை அதிகாரி பந்துல வீரசிங்க உத்தரவின் பேரில் மன்னார் மையக்காவல் நிலைய போலீஸ் பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு ரகசியமாக கண்காணித்தனர். அதனையடுத்து அங்குள்ள கடற்கரையோர பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 கிலோ 800 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாவை மீட்டனர்.
அதனை அங்கு போட்டுச்சென்றவர்கள் யார் என்று தெரியவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா ரூ. 1.25 கோடி மதிப்புள்ளது என தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல் நிலைய அதிகாரியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கள்ளத்தோணியில் கடத்திவரப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் பொலீசார் மீட்டனர். அது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மன்னார், பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகளும் சிக்கின. மேலும் அங்கிருந்து 2250 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூட்டைகள் சுங்க இலாகா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட நபர்களை கொரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் மன்னார் பகுதி, வங்காலை நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 33 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா மூட்டைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் 29 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என பொலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!