பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. டெங்கு கொசுக்களை அழிக்க புகை மருந்து‌ அடிக்க வேண்டும்‌ – கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று நடவடிக்கைகளில்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டெங்கு கொசு‌ உற்பத்தியாகும்‌ இடங்களைக் கண்டறிந்து‌ புகை மருந்து‌ அடிக்க வேண்டும்‌ என்று ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கவும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடமும், லாரி பணியாளர்களிடமும் கொடுக்க வேண்டும்.

மேலும், மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்கள் குப்பைகளை தனித்தனியாகப் பிரித்து லாரி பணியாளார்களிடம் வழங்க வேண்டும். மேலும், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப்பணி மேற்பார்வையாளா்கள் தினசரி வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை சாக்கடைகளில் கொட்டாதவண்ணம் கண்காணிக்கவும், சாக்கடைகளில் அடைப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

நீர் தேங்கியுள்ள இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து புகை மருந்து அடிக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாகஅப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்று நடவடிக்கைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலா்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக்கழுவுவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்எனவே பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் தடுத்திட மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் .லட்சுமணன், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!