வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா அல்லது, கூட்டணி அமைத்து களமிறங்கலாமா என்று விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில், 2021 சட்டசபை தேர்தலின் போது தனித்தா அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், கமல்ஹாசனுக்கு வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் கமல்ஹாசனுக்கே அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பை வெளியிட்ட மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறினார்.