இவர்தான் முக்கிய குறி.. அதிமுகவின் அதிரடி வியூகம்.. திமுகவும் விடுவதாக இல்லை..! பரப்பரப்பில் அரசியல்..

கோவில்பட்டி,

கோவில்பட்டி தொகுதியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வீழ்த்த, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிர வியூகங்களை கையில் எடுத்துள்ளன.

2016ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்த தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே அந்த கட்சி சார்பில் சீனிவாசன் போட்டியிடுகிறார். கடம்பூர் ராஜு கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் இந்த தொகுதியில் வென்றார். சீனிவாசனோ, நேரடி உதய சூரியன் வேட்பாளர் இல்லை. எனவே தினகரன் கோவில்பட்டியில் களமிறங்க முடிவு செய்தார்.

கோவில்பட்டி தொகுதியில் தேவர் சமூக ஓட்டுக்கள் 70 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதை தினகரனுக்கு மொத்தமாக கொண்டுவர, தினகரனின் தளபதி என்று அறிவிக்கப்பட்ட கயத்தாறு மாணிக்கராஜ் தீவிரமாக உழைத்து வருகிறார். அடுத்தபடியாக தொகுதியில் உள்ள ஜாதி நாயுடுகள். தேமுதிக இந்த கூட்டணியில் இருப்பதால் அந்த ஓட்டும் தனக்கு வரும் என்பது தினகரன் கணக்கு. இந்த தைரியத்தில்தான் அவர் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். தொகுதிக்குள் இனி ஏப்ரல் முதல் வாரம்தான் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த இடைவெளியில் தினகரனை வீழ்த்த தேவையான நடவடிக்கையை எடுக்க அதிமுக தீவிரம் காட்டுகிறது.

தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி பிரச்சாரம் செய்து வருகிறார் கடம்பூர் ராஜு. தினகரன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார். மறுபக்கம் சசிகலா மீது அன்பு கலந்து குரலில் பேசி பவ்யம் காட்டுகிறார். இப்படி அவர் வியூகம் இருக்கிறது. இன்று, முதல்வர் எடப்பாடியாரும் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

எனவே கடம்பூர் தரப்பு உற்சாகமடைந்துள்ளது. கட்சி ரீதியாக என்ன உதவி தேவையோ சொல்லுங்கள் செய்கிறோம் என எடப்பாடியாரும், அமைச்சருக்கு உறுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் சட்டசபைக்கு வந்தால் அரசியலில் அவர் நீடிப்பார். ஒருவேளை தோற்றால், அத்தோடு அவரது அரசியல் சகாப்தம் முடியும் என்பது, அதிமுக தலைமை கருத்து என்பதால் கோவில்பட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறதாம்.

திமுகவும் விடுவதாக இல்லை. கோவில்பட்டி தொகுதி தூத்துக்குடி மாவட்டத்திற்குள்தான் உள்ளது. தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும், இந்த தொகுதியை கவுரவ பிரச்சினையாக எடுத்துள்ளார். திமுக நிர்வாகிகளை அழைத்து, நமது வேட்பாளர் என்று நினைத்து, வேலை பாருங்கள் என நறுக்கென சொல்லியுள்ளார்.

சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது வந்த கூட்டத்தை பார்த்து தினகரன் தரப்பு சற்று மிரண்டு போனதாகத்தான் கூறப்படுகிறது. இப்போது கனிமொழி தனது கட்சியினருக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், தினகரன் முன்கூட்டியே தொகுதிக்கு திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அவர் வந்து பிரசாரம் செய்தால், வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்க முடியும் என நம்புகிறாராம்.,.

Translate »
error: Content is protected !!