சென்னை,
கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பியை அங்கிருந்து மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை அதிரடியாக மாற்றி தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை போலீஸ் கமிஷனர், கோவை எஸ்பி, திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சி கலெக்டர், எஸ்பி மற்றும் மத்திய மண்டல ஐஜி, கோவை ஐஜி ஆகியோரை கடந்த ஒரே வாரத்தில் அங்கிருந்து தேர்தல் கமிஷன் தூக்கியடித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது கரூர் கலெக்டர், எஸ்பியை அங்கிருந்து மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவு விவரம்:
கரூர் கலெக்டர் மலர்விழி அங்கிருந்து மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி பிரஷாந்த் எம் வாட்னரே கரூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் எஸ்பி மகேஷ்வரன் மாற்றப்பட்டு சென்னை மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய் கரூர் எஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். கோவை தலைமையிட துணைக்கமிஷனர் ஜெயச்சந்திரன் மயிலாப்பூர் துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.