திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வருடன் உரிமையாளர்கள் சந்திப்பு

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து,  திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோவிட் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்கள் கூட திறப்பட்டுவிட்டன.

மத்திய அரசு திரையங்குகள் திறக்க அனுமதி அளித்ததன்பேரில், கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் அவை திறக்கப்பட்டுள்ளன. எனினும்,  தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை. கடந்த ஏழு மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடியே இருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இச்சூழலில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதேபோல், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்ற திரையரங்கு உரிமையாளர்கள், அவரது தாயின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர், தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். பன்னீர்செல்வம், அபிராமி, நாமநாதன் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது இருந்தனர்.

Translate »
error: Content is protected !!