சேலம்,
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் அதிகமாக பரவி வருகிற சூழலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம். கோவிஷீல்டு, கோவேக்சின் என்று இருவகையான தடுப்பூசிகள் உள்ளது. தடுப்பூசிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும் கொரோனா நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம். நாளை (புதன்கிழமை) வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. எனவே 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் அருகே கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அங்கு சிசிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு நோயாளிக்கு வழங்கப்பட உள்ள படுக்கை, தனி அறை மற்றும் உணவு உள்ளிட்ட இதர வசதிகள் குறித்தும், நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.