மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக, அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7 .5% இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது.
எனினும், இதுவரை கையெழுத்திடாமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் கடத்தி வருவது, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரை அதிருப்தியும் ஏமாற்றமும் அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே, நீட் தேர்வு முடி வெளியாகி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கும் சூழலில், ஆளுநர் புரோகித் மவுனமாக இருப்பதை பாமக ராமதாஸ், மதிமுக வைகோ உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கண்டித்து வருகின்றனர். இதனால், ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடி உண்டாகவே, அதிமுக மூத்த அமைச்சர்கள் 5 பேர் தமிழக ஆளுநரை சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இச்சூழலில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி, ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக இணைந்து போராட வருமாறு, அதிமுகவுக்கு டிவிட்டர் பதிவு வாயிலாக அழைப்பும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது பதிவில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி ஆளுநருக்கு திமுக சார்பில் கடிதம் எழுதியுள்ளேன். இந்த நேர்வில் ஆளுநருக்கு எதிராக அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார். மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள அதிமுகவுடன், ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து போராடத் தயார் என்று திமுக தலைவர் கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
—