சென்னையில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 கொரோனா நோயாளிகள்.. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 பேரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டது.

தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து முதன்முறையாக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரேனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புகார்கள் இருப்பின், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 044- 25384520 தொலைப்பேசி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இதுவரை பெறப்பட்ட 12 புகார்கள் மீது வருவாய்துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 புகார்களில் விதி மீறல் இல்லை எனவும், ஒரு நோயாளி உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 5 பேரிடம் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனிவரும் நாட்களில் வெளியே வரக்கூடாது மீறினால் கொரேனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித் துள்ளார்.

Translate »
error: Content is protected !!