சேலம் மாவட்டம் ஓமலூரில் புரூட்டி ஜுஸ் பாட்டில்கள் பெயரில் 1,200 மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டதை போலீசார் வாகன சோதனையின் போது கண்டுபிடித்தனர். அது தொடர்பாக அண்ணன், தம்பி இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடகாவில் இருந்து சேலம், ஓமலூர் வழியாக தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திவரப்படுவது வழக்கமான ஒன்று. அது தொடர்பாக ரகசிய தகவல்கள் வரும் போது போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கும்படி சேலம் எஸ்பி தீபா கார்னிகர் உத்தரவின் பேரில் ஓமலூர் இரும்பாலை மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அதன்பேரில் போலீசார் ஓமலுார் எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். நேற்று இரவு கர்நாடக பதிவெண் கொண்ட பொலிரோ வாகனத்தை மடக்கி உள்ளே ஆய்வு செய்தனர். உள்ளே புரூட்டி ஜூஸ் பெட்டிகள் அடுக்கி வைக்கப்படடிருந்தது. அதை பிரித்துப் பார்க்கும்போது அதன் உள்ளே வகை வகையான கர்நாடக மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மொத்தம் 25 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 180 மில்லி லிட்டர் கொண்ட 48 பாட்டில்கள் வீதம் 1,200 பாட்டில்கள் இருந்தன. அதனையடுத்து மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவற்றைக் கடத்தி வந்த கர்நாடகா, ஜோடுகுழி பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன் (37), ரமேஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.