சென்னையில் பெண்ணிடம் இழிவாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்; இதற்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது; இதுவரை பணிகள் முழுமையாக தொடங்கப்படாத நிலையில், அந்த மருத்துவமனைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச் என்பவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தமிழ்நாடு மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன், சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் சுப்பையா சண்முகம் உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுப்பையா சண்முகம் என்பவர்தான், அண்மையில் சென்னை நங்கநல்லூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில், பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொல்லை செய்து சர்ச்சையில் சிக்கியர்.
மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் செய்யப்பட்டதற்கு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவரை துன்புறுத்திய புகாரில் சிக்கியவரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சி எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன், எம்பிக்கள் ரவிக்குமார், ஜோதிமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.