கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் சென்னை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மே 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பேருந்து பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையிலான மற்றும் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ம் தேதி முதல் 208 மின்சார ரயில்கள் சென்னை புறநகரில் இயங்கி வந்தது. இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புறநகர் ரயில் சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மூர்மார்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 97 மின்சார ரயில் சேவையும், மூர் மார்க்கெட், கும்மிடிபூண்டி, சூலூர்பேட்டை, வழித்தடத்தில் 48 சேவைகளும் வழங்கப்படும்.