தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, வளர்ப்புத் தாயாக பசுமாடு பால் கொடுத்து வளர்த்து வருகிறது.
எல்லா உயிர்களுக்கும் தாய் என்ற உறவு புனிதமானது. தாய் இல்லாத குழந்தைக்கு பாசம் காட்டும் உறவு வளர்புத்தாயாக மாறுகிறது. இதன் வரிசையில் தாய் இல்லாத ஆட்டுக்குட்டிக்கு, பசு வளர்ப்புத்தாயாக அன்பு செலுத்தி வருகிறது. குள்ளப்புரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பட்டதாரி கணேசன் 31. இவர் 8 மாடுகள், 50 ஆடுகளை வளர்க்கிறார்.
இவரது கொட்டத்தில் 2 மாதங்களுக்கு முன் ஆடு குட்டியை ஈன்றது.ஆட்டுக்குட்டி பிறந்த 25 வது நாளில் தாய் இறந்தது. தாய்பால் இல்லாததால் ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கப்பட்டது. ஒரே கொட்டத்தில் தாயின் அரவணைப்பிற்கு தவித்த ஆட்டுக்குட்டியை, அதே இடத்தில் வளரும் 9 வயது பசுமாடு தடவி கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது.
இதன் வெளிபாடாக 2 மாதங்களாக தனது கன்றுக்குட்டிக்கு நிகராக ஆட்டுக்குட்டிக்கு,பசு பால் கொடுக்கிறது. பிற ஆடுகளை அனுமதிப்பதில்லை. பசுவிடம் ஆட்டுக்குட்டி ஒட்டி உறவாடுகிறது. கணேசன் கூறுகையில்: பசுவும், ஆட்டுக்குட்டியும் தாய், மகளாக அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். கால்நடைகளிடையே அன்புநேயம் தெரிகிறது. பசுவிடம் ஆட்டுக்குட்டி பால் குடித்த பிறகே பால் கறப்போம் என்றார்.