சென்னை
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட 3,440 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பார்சலில் போதை மாத்திரைகள் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பார்சல் அலுலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பார்சலை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் பிரித்து சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் ஏராளமான போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றை பிரித்துப் பார்த்த போது உள்ளே ஆட்விஸ் என்ற பெயருடைய 10 மில்லி கிராம் மாத்திரைகள் 234 அட்டைகள், லோன்செப் 1 மில்லி கிராம் மாத்திரைகள் 50 அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றில் மெத்தில்பெனிடேட் மாத்திரைகள் என்னும் போதை தரக்கூடிய மாத்திரைகள் 2,340ம், ஜோல்பிடெம் மாத்திரைகள் 600 மற்றும் குளோனோசிபெம் 500 மாத்திரைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கூறுகையில், ‘‘இவை மனோ ரீதியாக மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகளாகும். இவற்றை நீண்டநேர போதைக்கும் பயன்படுத்துகின்றனர். அவற்றுக்குரிய ஆவணங்கள் இல்லாததால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அந்த பார்சல் அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் இருந்து சென்னையில் உள்ள மருந்துகள் மொத்தமாக விற்பனை செய்யும் நபர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த நபர் தொடர்பாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.