வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வசீம் அக்ரம் கூலிப் படையினரால் படுகொலை செய்யபட்டுள்ளார். அப்பகுதியில் அறியப்பட்ட நபராக இருந்த அவரை மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் ஓட ஓட விரட்டி கூலிப்படையினர் படுகொலை செய்துள்ளனர். அவர் கொல்லப்படும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோவும் மக்களிடையே பரவி வருகிறது. பார்ப்போரை பதறச் செய்யும் வகையில் சரமாரியாக கூலிப்படைகள் வெட்டிய காட்சிகள் மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.
வாணியம்பாடியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து வசீம் அக்ரம் கொடுத்த புகார் தான் இந்த கொலைக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. கஞ்சா போன்ற போதைப்பொருளின் சீரழிவு சமூகத்தை எந்தளவு பாதித்துள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பற்ற இளைஞர்கள் அடர்த்தியாக உள்ள பகுதியை குறிவைத்து சில சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையை முன்னெடுப்பதாக வரும் தகவலை இச்சம்பவம் உறுதி செய்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை பரவலாக விற்பனை செய்யப்படுவதாகவும் முறையான நடவடிக்கை எதுவுமில்லை என்றும் திமுக குற்றம் சாட்டியது. தற்போதைய ஆட்சியில் கள்ளத்தனமாக குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்வதை கண்டறிந்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயத்தை சீரழிக்கும் இத்தகைய போதைக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தாவிட்டால் சமூக ஒழுங்கு சீர்கெட்டுப் போகும்.
இதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து இளைஞர்களிடையே உள்ள போதைப் பொருள் பழக்கம் – விற்பனை ஆகியவற்றை களையெடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையை முடுக்கி விட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். எந்த மனிதனின் உயிரையும் பறிக்கும் உரிமை தனிமனிதர்களுக்கு இல்லை. எனவே இப்படுகொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய சமூக விரோதிகளை வளர விடுவது சமூகத்திற்கு பேராபத்தாக அமையும் என்பதால் காவல்துறையின் கண்காணிப்பை வலுப்படுத்தி கஞ்சா போன்ற போதைப் பொருளை பரவலாக்கும் சமூக விரோதிகளை களையெடுக்க தமிழக அரசு விரைந்து முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.